தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு: வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவு

தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலை 6 மணிக்கு நிறைவடைவதால்,

தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலை 6 மணிக்கு நிறைவடைவதால், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்தல் பணியாற்றும் அரசியல் கட்சியினர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கூறினார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கியிருந்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் மாவட்டத்தைவிட்டு வெளியேறி தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விட வேண்டும். தேனி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மொத்தமுள்ள 1,783 வாக்குச் சாவடிகளில், 209 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 753 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடவடிக்கைகள் வெப்-கேமிராவில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் இதுவரை 98 சதவிகிதம் பேருக்கு வாக்குச் சாவடி அடையாளச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளில் சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 
 அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஏப்.18-ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும். அதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வாக்குச் சாவடி முகவர்கள் முன்னிலையில் சோதனை வாக்குப் பதிவு நடைபெறும். இடைத் தேர்தல் நடைபெறும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப் பேரவை தொகுதிகளில் காலை 5.30 மணிக்கு சோதனை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப் பதிவு முடிவடைந்ததும், வாக்குச் சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும் என்றார்.
 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் கூறியது: மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வாக்குப் பதிவு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 420 தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவு போலீஸார், 450 மத்திய பாதுகாப்பு படையினர், 1,810 காவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள், 243 ஆயுதப் படை காவலர்கள், 560 முன்னாள் படை வீரர்கள், 20 தீயணைப்புத் துறை வீரர்கள், 100 தேசிய மாணவர் படையினர் மற்றும் 10 ஓய்வு பெற்ற காவலர்கள் ஈடுபடுகின்றனர். வாக்குச் சாவடி கண்காணிப்பு பணிக்கு 20 அதிரடிப் படை பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் குறித்து இதுவரை  திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மீது 52 வழக்குகள், அதிமுக கூட்டணிக் கட்சிகள் மீது 46 வழக்குகள், அமமுக மீது 17 வழக்குகள், நாம் தமிழர் கட்சி மீது ஒரு வழக்கு உள்பட மொத்தம் 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.
பெரியகுளம்: பெரியகுளத்தில் திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தலைமையில் போலீஸார் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் என சுமார் 1000 க்கு மேற்பட்டோர் பெரியகுளம்- கம்பம் சாலையில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக அணிவகுத்து சென்று பழையபேருந்து நிலையத்தில் அணிவகுப்பை முடித்தனர்.
 இந்த அணிவகுப்பில் பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் பெரியகுளம் காவல் ஆய்வாளர் சுரேஷ், தென்கரை காவல் ஆய்வாளர் மதனகலா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயசிங் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com