வேட்பாளர்களை நேரில் பார்க்காத மலை கிராம மக்கள்

தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் யாரையும் இதுவரை போடி அருகே மலை கிராம மக்கள் நேரில்

தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் யாரையும் இதுவரை போடி அருகே மலை கிராம மக்கள் நேரில் பார்த்ததில்லை. இதனால் தங்கள் கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
  தேனி மக்களவை தொகுதிக்குள்பட்ட  போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள மலை கிராமங்களான கொட்டகுடி, குரங்கனி, கொழுக்குமலை, சென்ட்ரல் ஸ்டேசன், டாப் ஸ்டேசன், ராசிமலை, அகமலை, அலங்காரம், ஊத்துக்காடு, முந்தல் ஆகிய மலை கிராமங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
   இவற்றில் இப்பகுதியை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் கொட்டகுடி, குரங்கனி, கொழுக்குமலை, டாப்ஸ்டேசன், முந்தல், அகமலை ஆகிய கிராமங்களுக்கு மட்டுமே ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியும். சென்ட்ரல் ஸ்டேசன், முதுவாக்குடி, ராசிமலை, அலங்காரம், ஊத்துக்காடு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு நடந்துதான் செல்ல வேண்டும்.
   இதனால் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் இந்த கிராமங்களுக்கு பிரசாரத்துக்கு செல்லவில்லை. மலைவாழ் பழங்குடியின மக்கள், விவசாயிகள் வசிக்கும் இக்கிராமங்களில் சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி போன்றவை இல்லை. குரங்கனி- டாப்ஸ்டேசன் மலைச்சாலை அமைக்க சுமார் 35 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மருத்துவ சிகிச்சைக்காக பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி கொண்டுவரும் சூழல் இக்கிராமங்களில் உள்ளது. வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு வராததால் அவர்களை மலை கிராம மக்கள் நேரில் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்க முடிய வில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com