ஆண்டிபட்டியில் அதிமுக-காங்கிரஸ் வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்திப்பு

ஆண்டிபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் இறுதி கட்ட பிரசாரத்தின்போது, அதிமுக-காங்கிரஸ் வேட்பாளர்கள் எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர். 

ஆண்டிபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் இறுதி கட்ட பிரசாரத்தின்போது, அதிமுக-காங்கிரஸ் வேட்பாளர்கள் எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர். 
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவுற்றது. 
இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ப. ரவீந்திரநாத்குமார், ஆண்டிபட்டி சட்டபேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ. லோகிராஜன் ஆகியோர், ஆண்டிபட்டி நகரில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் மாலை 4 மணியளவில் ஊர்வலமாக வந்தனர். 
இவர்களுடன், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர். பார்த்திபன் மற்றும் கட்சியின் நிர்வாகிகளும் சென்றனர். 
திறந்த ஜீப்பில், ஆண்டிபட்டி தெப்பம்பட்டி சாலை பிரிவு அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது கட்சியினருடன் ஊர்வலமாக வந்தார். இரு கட்சி வேட்பாளர்களும் எதிரெதிரே சந்தித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
அதையடுத்து, ஏராளமான போலீஸார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாகனத்தை சுற்றி நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 
அப்போது, திறந்த வாகனத்தில் நின்றபடி வந்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பிரசார நேரம் முடியப் போகிறது. எனவே, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நிறுத்தி வைக்காமல் அனுப்பி வைக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டார். 
மேலும், கட்சி தொண்டர்கள் அனைவரும் அவரை அனுப்பி வைக்க உதவும்படியும் அறிவுறுத்தினார். அதன்பின்னர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com