தேனியில் தனியார் கிட்டங்கியில் தீ விபத்து

தேனியில் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பல்பொருள் அங்காடி கிட்டங்கியில்

தேனியில் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பல்பொருள் அங்காடி கிட்டங்கியில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான பொருள்கள் எரிந்து நாசமாகின.
தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே காட்டுபத்திரகாளியம்மன் கோயில் செல்லும் தெருவில் தனியார் பல்பொருள் அங்காடிக்குச் சொந்தமான கிட்டங்கி உள்ளது. இந்தக் கிட்டங்கியின் மாடிப் பகுதியில் பிற்பகல் 2 மணிக்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அங்கு கட்டில், பீரோ, மெத்தை மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 
இது குறித்து அப் பகுதியில் உள்ளவர்கள் அளித்த தகவலில் அங்கு வந்த தேனி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கோட்ட அலுவலர் தென்னரசு, தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் ஆகியோர் தலைமையில் தேனி, கம்பம் தீயணைப்பு நிலைய பணியாளர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 
இந்த தீ விபத்தில் கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் மதிப்பு குறித்தும், தீ விபத்திற்கான காரணம் குறித்தும் தேனி காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com