வருசநாடு வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த 3 பேர் கைது
By DIN | Published On : 21st April 2019 01:18 AM | Last Updated : 21st April 2019 01:18 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், வருசநாடு வனப்பகுதிக்குள் நாட்டுத் துப்பாக்கி, பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 3 பேரை வனத்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஆண்டிபட்டி அருகே வருசநாடு வனச்சரகத்தில் அரியவகை மரங்கள் மற்றும் யானை, புலி, காட்டு மாடு, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியை மேகமலை வனச் சரணாலயமாக மாற்றிய பின் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் வருசநாடு வனச்சரகர் இக்பால் தலைமையில் வனத்துறையினர் மஞ்சனூத்து தெற்கு சரக வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்வகையில் வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த 3 பேரை வனத்துறையினர் துரத்திப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த திருப்பதி, தேனி அருகே அரண்மனைபுதூரைச் சேர்ந்த பாண்டியராஜன், வருசநாட்டை சேர்ந்த சுரேஷ் என்பதும், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அவர்கள் வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள், பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும்
வேட்டைக்குத் தேவையான டார்ச் லைட்டு' கள் உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.