ஆண்டிபட்டியில் சாலை அபாய வளைவுகளில் தடுப்புச் சுவர்கள் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 04th August 2019 03:56 AM | Last Updated : 04th August 2019 03:56 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு -வைகை அணை சாலையில் உள்ள வளைவுகளில் விபத்து அபாயம் உள்ளதால் சாலையோரம் தடுப்புச் சுவர்கள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைகை அணைக்கு ஆண்டிபட்டியில் இருந்தும், க.விலக்கு பகுதியில் இருந்தும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. க.விலக்கு பகுதியிலிருந்து வைகை அணைக்கு 7 கி.மீ. கொண்ட இச்சாலையை ஆண்டிபட்டி உள்கோட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது. இந்நிலையில் இச் சாலையில் அபாய வளைவுகள் அதிகம் உள்ளன. இவற்றில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையின் நடுவில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது. இதையொட்டி சாலையின் இருபுறமும் மண் குவிக்கப்பட்டு சாலை உயரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த அபாய வளைவுகளில் சாலையின் இருபுறமும் அதன் ஓரங்களில் தடுப்புச் சுவர் அமைக்கப்படாத காரணத்தால், இப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இவ் வழியாக தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வைகை அணைக்குச் சென்று வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் இல்லாத காரணத்தால் இச் சாலையின் வழியாக கனரக வாகனங்களும் அதிகம் செல்கின்றன. இதன் காரணமாக அபாயகரமான வளைவுகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
எனவே க.விலக்கு முதல் வைகை அணை வரையில் உள்ள சாலையில் அபாய வளைவுகளில் சாலையோரம் தடுப்புச் சுவர்கள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.