தேனி மாவட்டத்துக்கு வறட்சி நிவாரண நிதி ஒதுக்குவதில் காலதாமதம்

தேனி மாவட்டத்துக்கு அரசு சார்பில் வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால்

தேனி மாவட்டத்துக்கு அரசு சார்பில் வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் ஆண்டிபட்டி வட்டாரத்தில் குடிநீர் விநியோகத்திற்காக புதிய ஆழ்துளை கிணறுகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு மற்றும் மூல வைகை ஆற்றுப் படுகையில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 20 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் போதிய மழையில்லாததால் இக்குடிநீர் திட்டங்கள் செயல் திறன் குறைந்துள்ளன.  தற்போது பெரியாறு அணையில் இருந்து முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருதால், முல்லைப் பெரியாற்றுப் படுகையில் உள்ள குடிநீர் திட்டங்களில் இருந்து மட்டும் போதிய அளவு குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது.
ஆண்டிபட்டி வட்டாரத்தில், மூல வைகை ஆறு வறண்டு காணப்படுவதால் மயிலாடும்பாறை, கோவில்பாறை, ஆத்தங்கரைப்பட்டி, குமணன்தொழு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்ட உறைகிணறுகளில் தண்ணீர் பம்பிங் செய்ய முடியவில்லை. இதனால், இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பாசனக் கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்துகின்றனர்.
ஆண்டிபட்டி வட்டாரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் தற்காலிக ஏற்பாடாக டேங்கர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து பிரச்னைகள் சமாளிக்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், ஆண்டிபட்டி வட்டாரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மூல வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பம்பிங் செய்வதற்கு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.30 லட்சம் திட்ட மதிப்பீடு செய்து, இதற்கு வறட்சி நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 
ஆனால், தேனி மாவட்டத்துக்கு அரசு சார்பில் வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், ஆண்டிபட்டி வட்டாரத்தில் குடிநீர் திட்ட சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களிடம் கேட்டற்கு,  அரசு சார்பில் மாவட்டத்திற்கு 2019-ஆம் ஆண்டுக்கான வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ததும், ஆண்டிபட்டி வட்டாரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ள பகுதிகளில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்துத்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com