முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் நீர் திறப்பு: கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு 1,100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு 1,100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் கம்பம் பள்ளத்தாக்கு கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ளிக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி  அணையின் நீர்மட்டம், 123.20 அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகமானதை தொடர்ந்து ஒரே நாளில் இரண்டடி உயர்ந்து, மாலையில் 125.10 அடியை எட்டியது.
அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரத்து, 321 கனஅடியாக இருந்தது. நீர் இருப்பு 3, 262 மில்லியன் கனஅடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு அணையிலிருந்து விநாடிக்கு 1,100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை 700 கனஅடி திறந்து விடப்பட்டது. 
நீர்வரத்து அதிகமானதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை கூடுதலாக 400 கனஅடி சேர்த்து 1,100 கனஅடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
குறிப்பாக, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, அணைப்பட்டி ஆகிய கிராம மக்களுக்கு ஒன்றிய நிர்வாகம் "தண்டோரா' மூலம் வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பை செய்தது.
மழை விவரம்: பெரியாறு அணையில் 200.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 235 மி.மீ., கூடலூரில் 53 மி.மீ., உத்தமபாளையத்தில் 57 மி.மீ., வீரபாண்டியில் 61 மி.மீ., மழையும் பெய்தது. ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகாநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் 53 மில்லி மீட்டர் மழை பெய்ததால், அணைக்கு விநாடிக்கு 15 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
 சுருளியில் 2ஆவது நாளாக குளிக்கத் தடை: இதேபோல், மேகமலை வனப்பகுதியில் பலத்த  மழை பெய்து வருவதால், அப் பகுதிகளில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 
 இதற்கிடையில் சுருளி அருவிக்கு நீர்வரத்து தரும் நீரூற்று ஓடைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை (ஆக. 8) சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 
 இந்நிலையில் வெள்ளிக்கிழமையும் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com