Enable Javscript for better performance
முல்லைப் பெரியாறு அணை தலைமதகில் குப்பைகள் தேக்கம்மின்சார உற்பத்தி, நீர் வரத்து குறைவதாக விவசாயிகள்- Dinamani

சுடச்சுட

    

    முல்லைப் பெரியாறு அணை தலைமதகில் குப்பைகள் தேக்கம் மின்சார உற்பத்தி, நீர் வரத்து குறைவதாக விவசாயிகள் புகார்

    By DIN  |   Published on : 24th August 2019 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முல்லைப் பெரியாறு அணை தலைமதகு பகுதிகளில் உள்ள குப்பைகளை தடுக்கும் சல்லடைகளை முறையாக பராமரிக்காததால், லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி பாதிப்பதுடன் பாசனத்திற்கான நீர் வரத்தும் குறைவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
    முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு கடந்த சில நாள்களாக, விநாடிக்கு 1,700 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால் லோயர்கேம்ப் நீர் மின்சார நிலையத்திற்கு 1,100 கன அடி தண்ணீர்தான் வருகிறது. இதற்கு தேக்கடி, ஆனவாச்சல், குமுளி போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் வராமல் தேங்கி விடுவதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் இப்பகுதிகளில் உள்ள குப்பைகள் கால்வாயில் விழுந்து தண்ணீர் செல்லும் பாதைகளில், அடைப்புகளை ஏற்படுத்தி, தண்ணீரின் அளவை குறைக்கிறது என்றும் கூறப்படுகிறது.
    சல்லடை சேதம்:  தமிழகப் பகுதிக்கு தண்ணீர்  வரும் போது, தேக்கடி, குமுளி பகுதிகளின் கழிவுகள் தலைமதகுக்கு செல்லும் கால்வாயில் விழாமல் இருப்பதற்காக, ஆனவாச்சல் என்ற இடத்தில் கால்வாயின் குறுக்கே பொதுப்பணித்துறையினர், இரும்பு கம்பியிலான சல்லடை அமைத்துள்ளனர். தற்போது, இந்த சல்லடை சேதம் அடைந்துள்ளது. இதனால் இலை, தழை குப்பைகள், மரக்கட்டைகள் ஆகியன இதில் சிக்கியுள்ளன. இதனால், திறந்து விடப்படும் தண்ணீர் இதன் வழியாக குறைந்தளவே செல்கிறது. இதே போல் மற்றொரு இடத்தில் உள்ள சல்லடையும், சேதமடைந்துள்ளதால் குப்பை அடைத்து உள்ளது. 
    சேதமான சல்லடைகளை, அடிக்கடி பராமரித்து, கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்தால், தமிழகத்திற்கு வரும் தண்ணீர் அளவு குறையாமல் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
    குறைந்த மின் உற்பத்தி: அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் லோயர்கேம்ப் நீர் மின் நிலையத்திற்கு, நான்கு குழாய்கள் மூலம் வருகிறது. தலா 400 கன அடி கொள்ளளவு கொண்ட குழாயில் நான்கு மின்னாக்கிகள் மூலம் தலா 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். ஆனால் தற்போது, அணையிலிருந்து தலைமதகு வழியாக தமிழகப் பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு தேக்கடி, ஆனவாச்சல், குமுளி பகுதிகளில் தேங்கியும், குப்பை, கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டும் அதன் அளவு குறைந்துள்ளது. இதனால் விநாடிக்கு 1,100 அல்லது 1,200 கன அடி தண்ணீர்தான் கிடைக்கிறது. 1,700 கன அடி கிடைக்கும் போது நான்கு மின்னாக்கிகளுக்கு தலா 400 கன அடி தண்ணீர் கிடைத்து, முழுமையாக இயங்கி, மொத்தம் 168 மெகாவாட் உற்பத்தி செய்து, உபரியாக 100 கன அடி தண்ணீர் வெளியேற வாய்ப்பு ஏற்படும். 
    ஆனால் தற்போது, தண்ணீர் குறைவாக கிடைத்து வருகிறது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையிலிருந்து 1,700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம், லோயர்கேம்ப் மின்சார உற்பத்தி நிலையம் மூலம் நான்கு மின்னாக்கிகள் மூலம் தலா 30, 30, 36, 42 என மொத்தம் 138 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது. இதனால், 30 மெகாவாட் மின்சாரம் குறைகிறது.  
    பராமரிப்பு குறைவு: முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 8 ஆம் தேதி அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு நீர் வரத்து விநாடிக்கு 666 கன அடியாக இருந்தது. அன்று முதல் இரண்டு மின்னாக்கிகள் செயல்பட்டு தலா 30, 33 மெகாவாட் மின்சார உற்பத்தி தொடங்கியது, வெள்ளிக்கிழமை வரை முழு கொள்ளளவு மின்சார உற்பத்தியான 168 மெகாவாட் உற்பத்தி செய்ய முடியவில்லை. இதற்கு தமிழகப்பகுதிக்கு வரும் கால்வாய் பகுதி ஆக்கிரமிப்பு, குப்பை அகற்றும் இரும்பு சல்லடை சேதம் போன்றவைதான் காரணம் என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள். இவற்றை சரி செய்வதன் மூலம்  தமிழகப் பகுதிக்கு கிடைக்கும் நீர் சரியாக கிடைத்து, மின்சார உற்பத்தி அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
     இது குறித்து அணைப் பொறியாளர் ஒருவர் கூறியது: தமிழகப்பகுதிக்கு தலைமதகு கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும் பாதையில் குப்பைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. கூடுதலாக சல்லடைகள் வழங்க உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai