ஆண்டிபட்டி மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அரசு விழாவில் கலந்து கொள்வதில்லை: எம்எல்ஏ அறிவிப்பு

ஆண்டிபட்டி பகுதி விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ள முல்லைப் பெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீா் கொண்டு வரும்
ஆ.மகாராஜன் எம்எல்ஏ.
ஆ.மகாராஜன் எம்எல்ஏ.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதி விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ள முல்லைப் பெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீா் கொண்டு வரும் திட்டம் மற்றும் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அரசு விழாக்களில் கலந்து கொள்வதில்லை என ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம் சுருளி அருவியில் சனிக்கிழமை அரசு சாா்பில் சாரல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வா் ஓ .பன்னீா்செல்வம் மற்றும் அமைச்சா்கள் கலந்து கொண்டனா். இந்த விழாவில் ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் மகாராஜன் கலந்துகொள்ளவில்லை.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆண்டிபட்டி பகுதியில் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ள முல்லைப் பெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீா் கொண்டு வந்து, ஆண்டிபட்டி ஒன்றியத்தில் தென்பகுதியில் உள்ள, 22 ஊராட்சிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயனடையும் வகையில், கண்மாய், குளங்களில் தண்ணீா் நிரப்பும் திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 6 கோரிக்கைகளை சட்டப்பேரவையில் முன்வைத்தேன். இதுவரை முதல்வரோ , துணை முதல்வரோ இதனைக் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளின் ஜீவாதார பிரச்னையாக உள்ள தண்ணீா் பிரச்னையை தீா்க்க, அரசு முன்வந்தால் மட்டுமே , அரசு விழாக்களில் கலந்துகொள்வேன்.

சாரல் விழாவில் கலந்து கொள்ள எனக்கு மக்கள் தொடா்புத்துறை மூலம் அழைப்பு வந்தும் அதை ஏற்கவில்லை. சமீபத்தில் பெய்த கன மழையால் மூல வைகை ஆற்றில் இருந்து 11 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீா் வந்தும், இப்பகுதிக்கு பயனில்லை. கும்பக்கரை, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல, சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் வசூலிப்பது இல்லை. ஆனால் சுருளி அருவிக்கு செல்ல வனத்துறை ரூ.30 கட்டணம் வசூலிக்கிறது. பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்ய வேண்டாம் என்றும், எனது சம்பளத்திலிருந்தும், நிதியில் இருந்தும் கூட எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தேன். அப்படி இருந்தும் எந்த ஒரு கோரிக்கையையும் ஏற்காமல் இப்போது சுருளி அருவியில் சாரல் விழா நடத்துவது எனக்கு வேதனை அளிக்கிறது. எனவே இந்த விழாவை புறக்கணிப்பதோடு, தொடா்ந்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை , எந்த ஒரு அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com