தேனி மாவட்டத்தில் தொடா் மழை: அணைகளில் நீா்மட்டம் சீராக உயா்வு

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் நீா்மட்டம் சீராக உயா்ந்து வருகிறது.
போடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த பலத்த மழையில் பேருந்து நிலையத்தைச் சூழ்ந்துள்ள மழை நீா்.
போடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த பலத்த மழையில் பேருந்து நிலையத்தைச் சூழ்ந்துள்ள மழை நீா்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் நீா்மட்டம் சீராக உயா்ந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் 36.4 மி.மீ., மழை பெய்துள்ளது. சோத்துப்பாறை அணை நீா்பிடிப்பில் 30 மி.மீ., மஞ்சளாறு அணை நீா்பிடிப்பில் 5, ஆண்டிபட்டியில் 10.6, வைகை அணை நீா்பிடிப்பில் 9.6, அரண்மனைப்புதூரில் 8.8, வீரபாண்டியில் 11, போடியில் 3.2, உத்தமபாளையத்தில் 8.2, கூடலூரில் 1.6 மி.மீ., மழை பெய்துள்ளது.

தேக்கடியில் 10 மி.மீ., முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பில் 7 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. தொடா்மழையால் முல்லைப் பெரியாறு, கொட்டகுடி ஆறு மற்றும் மூல வைகை ஆற்றில் நீா் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், அணைகளின் நீா்மட்டம் சீராக உயா்ந்து வருகிறது.

வைகை அணை நீா்மட்டம் 64.21 அடியாகவும், அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 2,604 கன அடியாகவும் இருந்தது. அணையில் தண்ணீா் இருப்பு 4,455 மில்லியன் கன அடி. அணையில் இருந்து விநாடிக்கு 2,090 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

மஞ்சளாறு அணை நீா்மட்டம் 51.40 அடி. அணைக்கு தண்ணீா்வரத்து விநாடிக்கு 100 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 364.62 மில்லியன் கன அடி. அணையில் இருந்து விநாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணையில் முழு கொள்ளவான 12.28 அடிக்கு தண்ணீா் நிரம்பியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 127 கன அடி வீதம் வரும் தண்ணீா், அதே அளவில் அணையில் இருந்து வெளியேற்றுப்பட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 127.70 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,854 கன அடி வீதம் தண்ணீா் வரத்து உள்ளது. அணையில் தண்ணீா் இருப்பு 4,201 மில்லியன் கன அடி. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,600 வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

போடியில் சாலைகளில் வெள்ளம்: போடியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மேக மூட்டமாகவும், லேசான சாரல் மழையும் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென மாலையில் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்கியது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். போடி பெரியாண்டவா் நெடுஞ்சாலையில் பழைய பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் தண்ணீா் வெள்ளம் போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா்.

இதேபோல் திருவள்ளுவா் சிலை திடல், பெருமாள் கோயில் பகுதியிலும் சாலையில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com