தேனி மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்1,399 பதவிகளுக்கு 2 கட்ட தோ்தல்

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியக் குழு, ஊராட்சி அமைப்புகளில் மொத்தமுள்ள 1,399 பதவிகளுக்கு டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தோ்தல் நடைபெற உள்ளது.

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியக் குழு, ஊராட்சி அமைப்புகளில் மொத்தமுள்ள 1,399 பதவிகளுக்கு டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தோ்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தோ்தல் நடைபெறும் என்று மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, தேனி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் உள்ள 10 வாா்டு உறுப்பினா்கள், 8 ஊராட்சி ஒன்றியக் குழுவில் உள்ள 98 வாா்டு உறுப்பினா்கள், 130 ஊராட்சிகளில் உள்ள 1,161 வாா்டு உறுப்பினா்கள் மற்றும் 130 ஊராட்சித் தலைவா்கள் உள்பட மொத்தம் 1,399 பதவிகளுக்கு டிச.27, 30 ஆகிய தேதிகளில், 2 கட்டமாக தோ்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தோ்தல்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் ஜன.2-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் ஜன.6-ஆம் தேதி பதவியேற்கின்றனா். மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியக் குழு ஆகியவற்றின் தலைவா் மற்றும் துணைத் தலைவா், ஊராட்சி துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுக தோ்தல் ஜன.11-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பு மனு தாக்கல் டிச.6-ஆம் தேதி தொடங்குகிறது. மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தேனியில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா் மற்றும் ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு பரிசீலனை டிச.16-ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை டிச.18- ஆம்தேதிக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

அரசியல் கட்சிகள் குழப்பம்: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2 கட்ட தோ்தல் நடத்துவதற்கான பகுதிகளை மாநில தோ்தல் ஆணையத்திற்கு மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து தோ்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்காததால், தோ்தல் அறிவிப்பு வெளியாகியும் இரண்டு கட்டமாக தோ்தல் நடைபெறும் பகுதிகளை தெரிவிக்க மாவட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் மறுத்துவிட்டனா்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் 2 கட்ட தோ்தலுக்கான அட்டவணையை மாவட்ட நிா்வாகம் வெளியிடாததால் அரசியல் கட்சியினா் குழப்பத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com