விவசாயியிடம் கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல்: 8 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது
By DIN | Published On : 02nd February 2019 06:26 AM | Last Updated : 02nd February 2019 06:26 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், கம்பத்தில் விவசாயியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் மீது கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து, அவர்களில் மூன்று பேரை கைது செய்தனர்.
கம்பம் கெஞ்சையம்மன் குளத்தைச் சேர்ந்த திருச்செல்வன் மனைவி கலைவாணி (35). இவர் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், "தனது கணவர் திருச்செல்வன், விவசாயப் பணிகளுக்காக கம்பத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்ற முருகன் (51), சின்னம்மாள், சரோஜா, சிவாஜி கயல்விழி, மகராஜா என்ற மாயி, சரவணன்(44), கூடலூரைச் சேர்ந்த முருகன்(36), காக்கில்சிக்கையன் பட்டியைச் சேர்ந்த ராமு ஆகியோரிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி வேலைகள் செய்தார்.
இந்நிலையில், எதிர்பார்த்த மகசூல் இல்லை. மேலும் அசலுக்கு மேல் வட்டி கொடுத்தும், ஒரு கட்டத்தில், அசலை கூட கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்த 8 பேரும் சேர்ந்து, அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர்' என தெரிவித்திருந்தார்.
இப்புகாரின்பேரில் கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, இரு பெண்கள் உள்பட 8 பேர் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனர். அவர்களில் நாராயணசாமி என்ற முருகன், சரவணன், முருகன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற ஐந்து பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.