சுடச்சுட

  

  அங்கன்வாடி மையங்களில் 363 காலிப் பணியிடங்கள்: பிப்.19-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

  By DIN  |   Published on : 12th February 2019 07:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 363 அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள், பிப்ரவரி 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் திங்கள்கிழமை  வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 21 அங்கன்வாடி பணியாளர்கள், 2 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 17 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 
  போடி ஒன்றியத்தில் 15 அங்கன்வாடி பணியாளர்கள், 19 உதவியாளர் பணியிடங்களும், சின்னமனூர் வட்டாரத்தில் 17 அங்கன்வாடி பணியாளர்கள், 13 உதவியாளர் பணியிடங்களும், கம்பம் ஒன்றியத்தில் 51 அங்கன்வாடி பணியாளர், 54 உதவியாளர் பணியிடங்களும், உத்தமபாளையம் ஒன்றியத்தில் 4 அங்கன்வாடி பணியாளர்கள், 1 குறு அங்கன்வாடி பணியாளர், 22 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
  க.மயிலை ஒன்றியத்தில் 14 அங்கன்வாடி பணியாளர்கள், 2 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 12 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களும், பெரியகுளம் ஒன்றியத்தில் 21 அங்கன்வாடி பணியாளர்கள், 28 உதவியாளர் பணியிடங்களும், தேனி ஒன்றியத்தில் 8 அங்கன்வாடி பணியாளர்கள், 1 குறு அங்கன்வாடி பணியாளர், 16 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களும், தேனி அல்லிநகரம் நகராட்சியில் 5 அங்கன்வாடி பணியாளர்கள், 20 உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
  இந்தப் பணியிடங்களுக்கு இனச் சுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில், நேர்முகத் தேர்வு மூலம் உள்ளூரில் வசிக்கும் தகுதியுள்ள பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  தகுதிகள்: அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடத்துக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், காலிப் பணியிடம் உள்ள பகுதியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். 2019 பிப்ரவரி 1-ஆம் தேதியன்று 25 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். கணவரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டோர் 40 வயதுக்குள்பட்டு இருக்க வேண்டும். மலைப் பகுதியில் வசிப்பவர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 20 முதல் 40 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் 25 முதல் 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். 
  அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவராகவும், காலிப் பணியிடம் உள்ள பகுதியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். 2019 பிப்ரவரி 1-ஆம் தேதியன்று 20 வயது பூர்த்தியடைந்தவராகவும், 40 வயதுக்கு உள்பட்டும் இருக்க வேண்டும். மலைப் பகுதியில் வசிப்பவர்கள் 45 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் 20 முதல் 43 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.
  விண்ணப்பிக்கும் இடம்: அங்கன்வாடி பணியிடங்களுக்கு ஆண்டிபட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், போடியில் வட்டாட்சியர் அலுவலகம், சின்னமனூரில் வட்டார வளர்ச்சி அலுவலகம், கம்பத்தில் உத்தமபாளையம் சார்பு-ஆட்சியர் அலுவலகம், உத்தமபாளையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம், க.மயிலையில் மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகம், பெரியகுளத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தேனி ஒன்றியத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பப் படிவம் பெற்று, பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
  விண்ணப்பப் படிவத்தை w‌w‌w.‌i​c‌d‌s.‌t‌n.‌n‌i​c.‌i‌n என்ற இணைய தள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
      விண்ணப்பப் படிவத்துடன் ஆதார் அட்டை, வீட்டு வரி ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகல், கல்விச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாற்றுத் திறனாளி மற்றும் முன்னுரிமைச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
      விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai