ஜெயமங்கலத்தில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 12th February 2019 07:09 AM | Last Updated : 12th February 2019 07:09 AM | அ+அ அ- |

பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட வைகை அணை சாலையில் ரைஸ் மில் தெருவில் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் முறையாகக் கட்டப்படாததால், 2 மாதங்களுக்கு முன் பிளவு ஏற்பட்டது. இதனால், இப்பகுதியில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இரவு நேரங்களில் நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதுவரை 4 பேர் காயமடைந்துள்ளனர். பிளவு ஏற்பட்டுள்ள பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். எனவே, இப்பாலத்தை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வட்டாரவளர்ச்சி அலுவலர் கூறியது: சேதமடைந்த பாலத்தை பார்வையிட்டு, உடனடியாக பாலத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்படும் என்றார்.