முல்லைப் பெரியாற்றில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு: பொதுமக்கள் புகார்

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்றில் குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரை, மின்மோட்டார்கள்

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்றில் குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரை, மின்மோட்டார்கள் மூலமாக திருடுவதை மின்சார வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல்  இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
     முல்லைப் பெரியாற்று தண்ணீரானது, லோயர்-கேம்ப், கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் முதல் தேனி அடுத்த குன்னூர் வரையில் சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவு கடந்து சென்று வைகை அணையை சேர்கிறது. 
      முல்லைப் பெரியாற்றின் அருகே  கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதியில்லை. ஆயக்கட்டு பாசன நீர் பயன்படுத்து வயல்வெளிகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் விவசாயிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பதுடன்,   பாசன நீரை பயன்படுத்த அனுமதி இல்லை. ஆனால், மின்சார வாரியம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, காலம் காலமாக ஆற்று நீரை சிலர் அதிக திறன் கொண்ட மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி, தரிசு நிலங்களை தோட்டமாக மாற்றி, கொள்ளை லாபத்துக்கு விற்று பணம் சம்பாதிக்கும் தொழிலாக செய்து வருகின்றனர். 
     அதேபோல், ஆற்றிலிருந்து பல கோடி ரூபாய் செலவில் குழாய்கள் பதித்து, அதன்மூலம் கொண்டு செல்லப்படும் தண்ணீரை, லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்த புகாரின்பேரில், கண்துடைப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
      முல்லைப் பெரியாற்றிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை ஆயிரக்கணக்கான மின்மோட்டார்கள், ஆயில் மோட்டார்களை பயன்படுத்தி தொடர்ந்து தண்ணீரை திருடி வருகின்றனர். இதனால், முழுக்க முழுக்க நேரடிப் பாசன நீரை நம்பி விவசாயம் செய்துவரும் பெரும்பான்மையான விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். 
     மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகள் தங்களுடைய பகுதியில் குடிநீர் தேவையை முல்லைப் பெரியாற்றின் மூலமே பூர்த்தி செய்து வருகின்றன. 
 இந்நிலையில், குடிநீருக்கும், முறைப்பாசனத்துக்கும் திறக்கப்படும் தண்ணீர் அதிகளவில் திருடப்படுவதால், உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு குடிநீரை விநியோகம் செய்யமுடியவில்லை. இதனால், மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்னரே தண்ணீர் பிரச்னை தலைதூக்க ஆரம்பித்து விட்டதாக, பொதுமக்கள் புலம்பத் தொடங்கிவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com