போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் அபகரிப்பு: 9 பேருக்கு சிறை

தேவாரத்தில் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக 9 பேருக்கு போடி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

தேவாரத்தில் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக 9 பேருக்கு போடி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
 தேவாரம் டி.கே.வி. பள்ளி தெருவைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் (65), தங்கராஜ் (53), பாபு (39). இவர்களுக்கு தேவாரம் வட்ட ஓடை புலத்தில் புஞ்சை நிலம் இருந்துள்ளது. அந்த நிலத்தை தேவாரம் பகுதியை சேர்ந்த ராஜா ((37), இவரது தந்தை ஈஸ்வரன் (60), இதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் (62), ராஜகோபால் (70), கனகராஜ் (54), ராகவன் (60), பாஸ்கரன் (60), தங்கம் (60), மாணிக்கம் (60) ஆகியோர் சேர்ந்து பத்திர எழுத்தர் முருகன் (50) என்பவர் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து கடந்த 2011 ஆம் ஆண்டு ராஜாவின் பெயரில் பத்திரம் பதிவு செய்து சொத்துக்களை அபகரித்துள்ளனர்.
 இதுகுறித்து தெரியவரவே ஜெயராமன் தரப்பினர் தேவாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸார் 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி தீர்ப்பு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் இந்த வழக்கில் தொடர்புடைய மாணிக்கம் இறந்து விட்டார். மீதியுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
 இதனையடுத்து நீதிபதி ஆர்.மணிவாசகன் தனது தீர்ப்பில், போலியான ஆள்கள், ஆவணங்கள் மூலம் சொத்தை அபகரிக்க முயன்ற ராஜாவுக்கு நான்கு பிரிவுகளின் கீழ் தலா இரண்டு ஆண்டுகள் வீதம் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ஈஸ்வரன், கனகராஜ் ஆகியோருக்கு மூன்று பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வீதம் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், ஜெயராமன், ராஜகோபால், ராகவன், பாஸ்கரன், முருகன், தங்கம் ஆகியோருக்கு மூன்று பிரிவுகளின் கீழ் தலா 4 ஆண்டுகள் மற்றும் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com