தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து காயமடைந்த தொழிலாளி சாவு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய சென்னை பெண் மீது போலீஸார் நடவடிக்கை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய சென்னை பெண் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என, தேனி மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் புதன்கிழமை தீக்குளித்த கூலி தொழிலாளி, சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
     தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் முனியாண்டி (58). அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு, இவருடைய மகன் பாலமுருகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக, சென்னையில் உள்ள இவருடைய நண்பரின் மகள் மானுவேல் மரிய செல்வம் என்பவர் கூறியுள்ளார்.     இதனை நம்பி, தனது மகன் மற்றும் உறவினர்களான அறிவழகன், கோவிந்தராஜன் ஆகியோருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.18 லட்சத்துக்கும் மேல் பல தவணைகளாக மானுவேல் மரிய செல்வத்திடம் கொடுத்துள்ளாராம். ஆனால், இவர்கள் மூவருக்கும் 11 மாதங்களாகியும் வேலை ஏதும் வாங்கித் தராததுடன், பணத்தையும் திருப்பிச் செலுத்தாததால்,  
கடந்த 2018 அக்டோபர் மாதம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முனியாண்டி புகார் அளித்துள்ளார். ஆனால், போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மனம் வெறுத்த நிலையில் இருந்து வந்துள்ளார்.
    இந்நிலையில், புதன்கிழமை மாலை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற முனியாண்டி, அங்குள்ள பூங்கா பகுதியில் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனே, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
     இது குறித்து தேனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.   ஆனால், சிகிச்சைப் பலனின்றி முனியாண்டி வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் உயிரிழந்தார். இதனையறிந்து மருத்துவமனைக்கு வந்த முனியாண்டியின் உறவினர்கள், பண மோசடியில் ஈடுபட்ட மானுவேல் மரிய செல்வத்தை உடனே கைது செய்யவேண்டும் எனக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்தனர். தகவலறிந்து சென்ற தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பின்னர், மாலையில் முனியாண்டியின் சடலத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இச்சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com