குன்னூர் வைகை ஆற்றில் குறைந்து வரும் நீர்வரத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து

குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், ஆண்டிபட்டி நகர் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
       தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சி மற்றும் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு, குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணற்றிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், குன்னூர் வைகை ஆற்றிலிருந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சிப் பகுதிகள், மற்றும் வள்ளல் நதி பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 
    வைகை ஆறு வறண்டு காணப்படும் நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலும் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், மிகவும் குறைந்த அளவு தண்ணீரே திறக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் வைகை அணையை எட்டவில்லை. இதனால், கடந்த சில வாரங்களாக வைகை அணைக்கு போதிய நீர்வரத்து இல்லை.
     வைகை ஆற்றோரம் விவசாயத்துக்காக மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கும் காரணத்தாலும், குன்னூர் வைகை ஆற்றில் நீர்வரத்து அடியோடு குறைந்துள்ளது. மிகவும் குறைந்த அளவு தண்ணீரே வைகை ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. 
  இதே நிலை நீடித்தால், இன்னும் சில நாள்களில் நீர்வரத்து அடியோடு நின்றுவிடும்.
     நீர்வரத்து குறைந்த காரணத்தால், குன்னூர் வைகை ஆற்றில்  அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளிலும் நீர்மட்டம் வெகு வேகமாக சரிந்து கொண்டே வருகிறது. போதிய மணல் பரப்பு இல்லாததால், கிணற்றில் நீர் சுரப்பதும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக, குன்னூர் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் பெறும் பகுதிகளில் இனிவரும் நாள்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக, 18 வார்டுகள் கொண்ட ஆண்டிபட்டி பேரூராட்சி, 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
    எனவே, பாதிக்கப்படும் பகுதிகளில் குடிநீர் தேவையை சமாளிக்க மாற்று ஏற்பாட்டுக்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com