தென்னந் தோப்புகளாக மாறிவரும் முல்லைப் பெரியாற்றின் கரைகள்: தண்ணீர் பற்றாக்குறையால் பரிதவிக்கும் விவசாயிகள்

முல்லைப் பெரியாற்றின்  கரைகள்  ஆக்கிரமிக்கப்பட்டு தென்னந் தோப்புகளாக மாறியிருப்பதால்   ஆற்றின் பரப்பளவு

முல்லைப் பெரியாற்றின்  கரைகள்  ஆக்கிரமிக்கப்பட்டு தென்னந் தோப்புகளாக மாறியிருப்பதால்   ஆற்றின் பரப்பளவு குறைந்து, திறக்கப்படும் நீரின் பயன்பாட்டு அளவை கணக்கிட முடியாமல் பொதுப்பணித் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு பாசன நீர் மூலமாக மாவட்டத்தில் இரண்டாம் போக நெற்பயிர் விவசாயம் 14,707 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று இருக்கிறது. ஆனால், விவசாயிகள் எதிர்பார்த்தபடி பருவமழை கை கொடுக்காததாலும், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாததாலும் நீர்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் 2 ஆம் போக நெற்பயிர் விவசாயத்துக்கு  தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், லோயர் கேம்ப், கம்பம், கூடலூர், க.புதுப்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், சீலையம்பட்டி, வீரபாண்டி, பழனிச்செட்டிபட்டி, தேனி குன்னூர் வரையில் செல்லும் முல்லைப் பெரியாற்றின் கரைகளின் இருபுறமும் தென்னந்தோப்புகளாக மாறி வருகிறது. அதேபோல், வாழை, கரும்பு உள்ளிட்ட காய்கறி விவசாயமும் நடைபெற்று வருகிறது. 
தண்ணீர் பிரச்னை ஏற்படும் காலங்களில் பொதுப்பணித் துறையினரால் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் எதிர்பார்த்த பலனை கொடுப்பதில்லை. மாறாக, திறக்கப்படும் தண்ணீரை பல இடங்களில் வழிமறித்து திருடப்படுவதால், ஆற்று நீரை நம்பி விவசாயம் செய்த நெற்பயிர் மற்றும் குடிநீர் தேவையில் பற்றாக்குறை ஏற்படுவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து உத்தமபாளையம் பகுதி விவசாயிகள் கூறியது:  கடந்த சில ஆண்டுகளாக ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால், பருவமழை காலங்களில்  விநாடிக்கு1500 கன அடிநீர் அளவு தண்ணீர் திறந்தாலே, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக, மாவட்ட நிர்வாகம்  பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்கிறது. அந்த அளவுக்கு ஆற்றின் பரப்பளவு குறைந்து பல இடங்களில் ஓடை போல் காட்சி அளிக்கிறது.
    எனவே திறக்கப்படும் தண்ணீரானது, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு சீராகக் கிடைக்க வேண்டும் என்றால், முல்லைப் பெரியாற்றின் கரையை ஆக்கிரமித்துள்ள ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், வாழை மற்றும் கரும்பு தோட்டங்களை அகற்றிட, மாவட்டநிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com