பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு: 596 காளைகள், 390 வீரர்கள் பங்கேற்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே  பல்லவராயன்பட்டியில்  ஏழைகாத்தம்மன் - வல்லடிக்காரசுவாமி கோயில் திருவிழாவை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே  பல்லவராயன்பட்டியில்  ஏழைகாத்தம்மன் - வல்லடிக்காரசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில்  596 காளைகள் , 390 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.
அய்யம்பட்டி  கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற  ஜல்லிக்கட்டு போட்டியை  தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ்  கொடியசைத்து தொடக்கி வைத்தார்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன்  முன்னிலை வகித்தார்.  காலை 8 மணிக்கு , முதல் காளையாக ஊர் கோயில் காளை  வாடிவாசல் வழியாக  அவிழ்த்து விடப்பட்டது.
பின்னர், தேனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, சேலம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 596 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அதேபோல மருத்துவப் பரிசோதனைக்கு பின்பு 390 மாடு பிடி வீரர்கள்  அனுமதிக்கப்பட்டனர்.
48 மாடு பிடி வீரர்கள் காயம்: இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமமுக துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் காளைகளும் பங்கேற்றன. இதில் காளைகள் முட்டியதில் பலத்த காயமடைந்த 4 பேர் தேனி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 44 வீரர்கள் லேசான காயம் அடைந்தனர்.
அனைவருக்கும் பரிசு: போட்டியில் பங்கேற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் குக்கர் மற்றும் தலைக்கவசம் பரிசாக வழங்கப்பட்டது. தவிர, போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி நாணயம், பீரோ , கட்டில் , இருசக்கர வாகனம், செல்லிடப்பேசி என பல பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 4 மணி வரையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நேரம் இல்லாத காரணத்தால் ஜல்லிக்கட்டில் பங்கேற்காத காளைகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியை ஏராளமானோர் பார்வையிட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பிற்பகலுக்கு பிறகு பார்வையாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் வாடிவாசல் முன்பு மட்டும் கூட்டம் இருந்தது. மற்ற பகுதிகள் பார்வையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com