முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற லாரி ஓட்டுநர் கைது
By DIN | Published On : 28th February 2019 08:09 AM | Last Updated : 28th February 2019 08:09 AM | அ+அ அ- |

பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்குமாறு கூறி, ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்ற லாரி ஓட்டுநரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரின் மகன் முருகன் (36). லாரி ஓட்டுநரான இவருக்கும் ஆண்டிபட்டி அருகே உள்ள ரோசனப்பட்டியைச் சேர்ந்த ஆண்டவரின் மகள் வேல்மணிக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். வேல்மணி தேனியில் உள்ள அவருடைய தாய் மாமன் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை மாலை காவல் நிலையத்திற்கு வந்த முருகன் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாராம். அங்கு இருந்த போலீஸார் அவரை தடுத்து விசாரித்தபோது மனைவியுடன் சேர்த்து வைக்கும்படி புகார் கொடுக்க வந்ததாகக் கூறினார். இதையடுத்து முருகனை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.