முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
பெரியகுளம் -வடுகபட்டி சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
By DIN | Published On : 28th February 2019 08:09 AM | Last Updated : 28th February 2019 08:09 AM | அ+அ அ- |

பெரியகுளம் - வடுகபட்டி சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து வடுகபட்டி, குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி மற்றும் ஆண்டிபட்டி பகுதிகளுக்குச் செல்வதற்கு பெரியகுளம் வழியாகவும் மற்றும் தாமரைக்குளம் வழியாகவும் சாலைகள் உள்ளன. இதில் பெரியகுளத்தில் இருந்து வடுகபட்டிக்கு 4 கி.மீ. தூரத்தில் செல்லலாம். தாமரைக்குளம் வழியாக 6 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டும்.
இதனால் பெரும்பாலான மக்கள் பெரியகுளம் -வடுகபட்டி சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் வளைவுகள் அதிகமாகவும், சாலை குறுகலாகவும் இருந்தது. இதனையடுத்து சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் சாலைப்பணிகள் தொடங்கின. இதில் பெரியகுளம் சிக்கனல் அருகே சிறிய பாலம் அமைக்கப்பட்டது. அதன் பின் பேப்பர் மில் அருகே சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. பின்னர் சாலையில் கற்கள் போடப்பட்டுள்ளன. அதன் பின் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. இதனால் பெரும்பாலான வாகனங்கள் தாமரைக்குளம் வழியாக சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. மேலும் கல்லூரி விலக்குப் பகுதியில் ஆக்கிரமிப்பால் சாலை குறுகலாக உள்ளது. இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வடுகபட்டி-பெரியகுளம் சாலைப்பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்துக்கு திறந்து விடவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.