முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
ஹைவேவிஸ்-மேகமலை அடிவாரத்தில் தோட்டங்களாக மாறியுள்ள நீர்நிலைகள்: விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு
By DIN | Published On : 28th February 2019 08:07 AM | Last Updated : 28th February 2019 08:07 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம் எரசக்கநாயக்கனூரில் ஹைவேவிஸ் - மேகமலை அடிவாரத்திலுள்ள நீர்நிலைகள், ஓடைகள் தோட்டங்களாக மாறிவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஹைவேவிஸ் - மேகமலை அடிவாரத்தில் எரசக்கநாயக்கனூர் அமைந்துள்ளது. இந்த மலைகளில் பெய்யும் மழை நீரானது, 10-க்கும் மேற்பட்ட ஓடைகள் வழியாக ஓடி, மரிகாட் அணை, நாயக்கர் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் தேங்கும்.
இதன்மூலம், நிலத்தடி நீர் உயர்ந்து வாழை, தென்னை, திராட்சை என அனைத்து தோட்ட விவசாயங்கள் மற்றும் கடலை, எள்ளு, துவரை, சோளம் போன்ற மானாவாரி விவசாயமும் அதிகளவில் நடைபெறுகின்றன. இந்நிலையில், மலை அடிவாரத்திலுள்ள ஓடைகள் அனைத்தும் முழுமையாக மறைக்கப்பட்டு, தோட்டங்களாக மாறிவிட்டன. மேலும், மழைநீர் தேக்கங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், மழைக் காலங்களில் தண்ணீரைத் தேக்க அமைக்கப்பட்ட குளங்கள் நீரின்றி பல ஆண்டுகளாக வறண்டு காணப்படுகின்றன.
மானாவாரி விளைநிலங்களுக்கு விவசாயிகள் ஓடைப் பாதை வழியாகவே தேவையான வாகனங்களை கொண்டு சென்று, அறுவடை செய்து விளைபொருள்களை எடுத்து வந்தனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்த நீர்வரத்து ஓடைகளை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டதால், விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குக் கூடச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியது: இங்குள்ள நீர்வழிப் பாதைகளை முழுமையாக ஆக்கிரமித்து, தோட்டமாக மாற்றி விட்டனர். 3 ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில், மத்திய-மாநில அரசுகள் கட்டிய தடுப்பு அணைகளையும் சேர்த்து தோட்டங்களாக ஆக்கிவிட்டனர்.
இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியதால், நூற்றுக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் எரசக்கநாயக்கனூர் மலை அடிவாரத்திலுள்ள நீர் வழிப்பாதை ஓடைகளை மீட்டெடுத்து, விவசாயப் பணிகள் மீண்டும் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.