ஆண்டிபட்டி அருகே நாயக்கர் கால சதிக்கல் கண்டெடுப்பு
By DIN | Published On : 05th January 2019 07:05 AM | Last Updated : 05th January 2019 07:05 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே நாயக்கர் காலத்தை சேர்ந்த சதிக்கல் ஒன்றை போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை கண்டெடுத்துள்ளனர்.
போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வர் டி.ராஜகுமாரன் வழிகாட்டுதலின்பேரில், வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் சி.மாணிக்கராஜ் தலைமையில் வரலாற்றுத் துறை மாணவர்கள் ராம்குமார், நந்தக்குமார், தேனி வைகை வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் கருப்பையா, அய்யனார், முரளி ஆகியோர் இணைந்து ஆண்டிபட்டி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் பிச்சம்பட்டி கிராமத்தில் தனியார் பள்ளி அருகே மண்ணில் பாதியளவு புதைந்த நிலையில் சதிக்கல் ஒன்று கண்டறியப்பட்டது.
இந்த சதிக்கல் குறித்து உதவி பேராசிரியர் சி.மாணிக்கராஜ் கூறியது: சதிக்கல் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலமுடையது. கல்லில் வீரன் ஒருவன் பீடத்தின் வலக்காலை இடப்பக்கமாக மடக்கியும், இடக்காலை தொங்கவிட்டும், சுகாசன அமர்வு கோலத்தில் அமர்ந்துள்ள நிலையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. வீரனுக்கு வலப்பக்கம் வீரனின் மனைவி சமபங்க நிலையில் நின்றுள்ளபடி புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பெண் தன் கணவன் இறந்த பின் சதி எனும் உடன்கட்டை ஏறியதை அடையாளப்படுத்தும் விதமான சிற்பமாக காட்டப்பட்டுள்ளது. நாயக்கர் காலத்திய ஆடை, ஆபரணங்கள் சிற்பத்தின் அமைப்பு கல்லில் சொல்லப்பட்டுள்ள செய்தி போன்றவற்றின் அடிப்படையில் இந்த சதிக்கல் கி.பி. 15, 16 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பது தெரிய வருகிறது என்றார்.
இதுபோன்ற பண்டைய நினைவுச் சின்னங்களை மாவட்ட நிர்வாகம் அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.