நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 05th January 2019 07:07 AM | Last Updated : 05th January 2019 07:07 AM | அ+அ அ- |

நிலப் பட்டா மற்றும் உள்பிரிவு மாறுதல் மனுக்கள் மீது கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரை பெற வேண்டும் என்ற வருவாய்த்துறையின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேனியில் நில அளவை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிய மாவட்ட மையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வீ.செல்வரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பிச்சைமணி, பொருளாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டம் குறித்து வீ.செல்வரெங்கன் கூறியது:
இணைய வழி விரைவு பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ், நிலப் பட்டா மற்றும் உள்பிரிவு மாற்றங்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது நில அளவை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து, வட்டாட்சியர்கள் மூலம் பட்டா மற்றும் உள்பிரிவு மாறுதலுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது இந்த சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையை பெற வேண்டும் என்றும் நகர்ப்புறத்தில் முழுபுல பட்டா மாறுதல் வழங்கும் அதிகாரத்தை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாற்றி வழங்கவும் வருவாய்த்துறை முடிவு செய்து, அதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், நிலப் பட்டா மற்றும் உள்பிரிவு மாறுதல் வழங்குவதில் காலதாமதமும், பொதுமக்களுக்கு அலைச்சலும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இந்த முடிவை வருவாய்த்துறை கைவிட வேண்டும். இணைய வழி விரைவு பட்டா வழங்கும் திட்டத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.