Enable Javscript for better performance
சண்முகா நதி நீர் இலக்கு பாசனப் பரப்புகளுக்குச் சென்றடைவதில் சிக்கல்!  விவசாயிகள் அதிருப்தி- Dinamani

சுடச்சுட

    

    சண்முகா நதி நீர் இலக்கு பாசனப் பரப்புகளுக்குச் சென்றடைவதில் சிக்கல்!  விவசாயிகள் அதிருப்தி

    By DIN  |   Published on : 08th January 2019 08:49 AM  |   அ+அ அ-   |    |  

    சண்முகா நதி நீர்த் தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு 23 நாள்களாகியும், கால்வாய் சீரமைக்கப்படாததால் 1,640 ஏக்கர் இலக்குப் பாசனப் பரப்புகளுக்கு தண்ணீர் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே மேகமலை அடிவாரத்தில் சண்முகா நதியின் குறுக்கே பொதுப்பணித் துறை மூலம் கடந்த 2004-இல் ரூ.14.70 கோடி செலவில் சண்முகா நதி நீர்த் தேக்கம் கட்டப்பட்டது. மொத்தம் 18 மீட்டர் உயரமுள்ள இந்த நீர்த் தேக்கத்தில் 7,957 மி.கன அடி வரை தண்ணீர் தேக்கலாம்.  நீர்த் தேக்கத்தின் நீர் பிடிப்புப் பகுதி  25.86 சதுர கி.மீ. பரப்பளவு.
    சண்முகா நதி நீர்த் தேக்கத்திலிருந்து 18.3 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைத்து, அதன்மூலம் ராயப்பன்பட்டி, மல்லிங்காபுரம், சின்னஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, அழகாபுரி, வெள்ளையம்மாள்புரம் வழியாக ஓடைப்பட்டி வரை தண்ணீர் கொண்டு சென்று, அப்பகுதியில் உள்ள 19 கண்மாய்களில் தண்ணீரைத் தேக்கி, 1,640 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கும், கால்நடைகளின் தேவைக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
    மேலும், சண்முகா நதி கால்வாயில் தண்ணீர் வரத்து உள்ள காலங்களில் அப்பகுதியில் உள்ள பாசனக் கிணறுகளில் நீர் சுரப்பு ஏற்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
    புதர் மண்டியுள்ள கால்வாய்:சண்முகா நதி நீர்த் தேக்கம் கடந்த 2018-ஆம் ஆண்டில் இரு முறை அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி நீர்த் தேக்கத்திலிருந்து அதன் இலக்கு பாசனப் பரப்புகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 14.47 கன அடி வீதம் தொடர்ந்து 50 நாள்கள் வரை தண்ணீர் திறக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
    இந்நிலையில், இங்கிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 23 நாள்களாகியும், கால்வாய் வழியாக 4 கி.மீ. தொலைவிலுள்ள சின்ன ஓவுலாபுரம் வரை மட்டுமே சண்முகா நதி நீர் சென்றுள்ளது. அதையடுத்து, எரசக்கநாயக்கனூரில் தொடங்கி ஓடைப்பட்டி வரையுள்ள பகுதிகளில் 14 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் தூர்வாரப்படாமல் புதர்மண்டியும், மண் மேவியும், ஆக்கிரமிப்பால் தடைபட்டுள்ளதால், சண்முகா நதி நீர் அதன் இலக்கு பாசனப் பரப்புகளுக்குச் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    இதனால், அப் பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடைகளின் தேவைக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 
    இந்தத் திட்டம் தொடங்கியது முதல் தற்போதுவரை அதன் இலக்கு பாசனப் பரப்புகளுக்கு பயனற்றதாகவே உள்ளது என்று, விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். 
    இது குறித்து ஏரசக்கநாயக்கனூரைச் சேர்ந்த விவசாயி எஸ். ராதாகிருஷ்ணன் கூறியது: சண்முகா நதி நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீரானது, 30 நாள்கள் வரை வரட்டாறு வழியாகச் சென்று நாகையகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள நிலங்களின் பாசனத்துக்கு பயன்படும். பின்னர், ஓடைப்பட்டி வரையுள்ள இலக்கு பாசனப் பரப்புகளுக்கு நீர்த் தேக்கத்திலிருந்து கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படும்.
    ஆனால், நீர்த் தேக்கத்தில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியதும், மறுகால் பாய்வதற்கு இடமளிக்காமல், நீர்த் தேக்கப் பகுதியை அடுத்துள்ள தனியார் பண்ணை நிலங்களின் பயன்பாட்டுக்காக விதிமுறையை மீறி வரட்டாறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், நீர்த் தேக்கத்தில் தண்ணீர் நிரம்பினாலும் ஓடைப்பட்டி வரை உள்ள இலக்கு பாசனப் பரப்புகளுக்கு காலதாமதமாகவே தண்ணீர் திறக்கப்படுகிறது.
    நாகையகவுண்டன்பட்டி பாசனப் பரப்புகளுக்கும் சண்முகா நதி நீர் பயன்படுவதில்லை.
    எனவே, சண்முகா நதி நீர்த் தேக்கம், கால்வாய் மற்றும் இலக்கு பாசனப் பரப்புகளை மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, எரசக்கநாயக்கனூர் பகுதியிலிருந்து கால்வாயை தூர்வாரி இலக்கு பாசனப் 
    பரப்புகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லவும், நீர்த் தேக்கம் மற்றும் கால்வாய் மடைகளில் தண்ணீர் திறப்பதை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp