ஆண்டிபட்டி பகுதியில் நலிவடைந்து வரும் சுண்ணாம்பு கல் தயாரிப்புத் தொழில்!

ஆண்டிபட்டி பகுதியில் சுண்ணாம்புக் கல் தயாரிப்பு தொழில் தொடர்ந்து நலிவடைந்து வருவதாக, தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆண்டிபட்டி பகுதியில் சுண்ணாம்புக் கல் தயாரிப்பு தொழில் தொடர்ந்து நலிவடைந்து வருவதாக, தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
     சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல் பண்டிகை என்றாலே, ஒரு மாதத்துக்கு முன்னரே சுண்ணாம்புக் கற்களை வாங்கி, அதை தண்ணீரில் கரைத்து, சுண்ணாம்புக் கரைசலை தயார் செய்து, அதனுடன் தேவையான நிறம் சேர்த்து வீடுகளில் வர்ணம் பூசும் வழக்கம் இருந்தது. 
     நகர்ப் பகுதியைக் காட்டிலும் கிராமப் பகுதிகளில் வசிப்பவர்களே அதிக அளவில் சுண்ணாம்புக் கரைசலைப் பயன்படுத்தி, வீடுகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபடுவர். கால்நடை வளர்ப்பவர்களும் மாட்டுக் கொட்டகைகளில் சுண்ணாம்பு கரைசலை கொண்டு வர்ணம் பூசுவர். மேலும், பொங்கல் பண்டிகையன்று தெருக்களிலும் சுண்ணாம்புக் கரைசலை தெளிப்பார்கள். 
    இதன் காரணமாக, சுண்ணாம்புக் கல் தயாரிக்கும் காளவாசல்கள் ஆண்டிபட்டி பகுதிகளில் அதிக அளவில் செயல்பட்டு வந்தன. சுண்ணாம்புக் கற்கள் தயாரித்து விற்கும் பணியில் ஒரு சில குடும்பங்கள் பாரம்பரியமாகவே ஈடுபட்டு வந்தன. 
     விருதுநகர் பகுதியில் உள்ள நிலங்களில் கிடைக்கும் ஒருவகை கற்களை வெட்டி எடுத்து, அதை சிறு சிறு துண்டுகளாக உடைத்து அதனுடன் கரி சேர்க்கின்றனர். கரி கலந்த கல் துண்டுகளை காளவாசலில் வைத்து நெருப்பு மூட்டுகின்றனர். பின்னர், அவை கூண்ணாம்புக் கற்களாகின்றன. அவற்றை, பொதுமக்களுக்கு 1 படி ரூ.30-க்கும், 1 டின் ரூ. 300-க்கும் சுண்ணாம்புக் கற்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம், சுண்ணாம்பு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களுக்கு வருமானம் கிடைத்து வந்தது.
    இந்நிலையில், நவீனத்தின் வளர்ச்சி காரணமாக வீடுகளுக்கு சுண்ணாம்பு கரைசலை கொண்டு வர்ணம் பூசும் வழக்கம் குறைந்து,  பெயின்ட் பயன்பாடு அதிகரித்து வருகிறது. நீண்ட காலம் பயன் தருகிறது என்பதால், கிராமம், நகரங்களில் வசிப்பவர்கள் தற்போது வீடுகளுக்கு வர்ணம் பூச பெயின்ட்டையே பயன்படுத்துகின்றனர்.
    இதனால், சுண்ணாம்பு கல் தயாரிக்கும் தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. 14 ஆண்டுகளுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புக் காளவாசல்கள் இருந்தன. ஆனால், தற்போது 1 சுண்ணாம்பு காளவாசல் மட்டுமே செயல்பட்டு வருகிறது. எனவே, சுண்ணாம்புத் தொழிலை பாரம்பரியமாக செய்து வந்த தொழிலாளர்கள், இன்று விற்பனை இல்லாமல் வேதனை அடைந்து வருகின்றனர்.
    இது குறித்து  சுண்ணாம்பு கற்கள் விற்பனையாளர் அழகர்சாமி கூறியது: கடந்த காலங்களில் மார்கழி மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே சுண்ணாம்பு கல் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கிவிடும். பொதுமக்களுக்கு வழங்குவதற்கு போதுமான அளவு சுண்ணாம்பு கற்கள் இருப்பு இல்லாமல், நாங்கள் தவித்த சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனால் பெயின்ட் வரவால், இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த பலர் தற்போது வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச் சென்று விட்டனர்.    நாங்கள் மட்டும்தான் இன்னும் பரம்பரைத் தொழிலை கைவிட மனமில்லாமல் செய்து வருகிறோம். எங்களுக்கு பின்னர் இந்த தொழிலை தொடர்ந்து நடத்த யாரும் இல்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com