ஆண்டிபட்டி அருகே மதுபானக் கூடமாக மாறி வரும் சேவை மையக் கட்டடம்
By DIN | Published On : 01st July 2019 02:04 AM | Last Updated : 01st July 2019 02:04 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி அருகே மதுபானக் கூடமாக மாறி வரும் சேவை மையக் கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் 2013-14 ஆண்டில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட சேவை மையம் கட்டப்பட்டுள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டடம் பயன்பாடின்றி காணப்படுகிறது.
இதனால் இந்த கட்டடத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் மது அருந்தும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கட்டடத்தைச் சுற்றிலும் காலி மது பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் என ஏராளமாக பொருள்கள் சிதறி கிடக்கின்றன. மது அருந்துவோர்கள் போதையில் கட்டடத்தை சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றனர்.
மேலும் இரவு நேரத்தில் இந்த கட்டடத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இந்த கட்டடத்தை சீரமைத்து வேறு அலுவல்களுக்கு பயன்படுத்த வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவரும் அரசு சேவை மைய கட்டடத்தை விரைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.