6 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை: ஒன்றிய அலுவலகத்தை மலை கிராம மக்கள் முற்றுகை

ஆண்டிபட்டி அருகே மலைக்கிராமத்தில் 6 மாதமாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய

ஆண்டிபட்டி அருகே மலைக்கிராமத்தில் 6 மாதமாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட காந்திகிராமம் மற்றும் முத்துநகர் ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. 500-க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாயம் சார்ந்த  தொழிலை செய்து வருகின்றனர்.  இக்கிராமங்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. 
கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனிடையே ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 6 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதனால் இப்பகுதியில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வந்தனர். மேலும் இது குறித்து கடமலை மயிலை ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 
 இதனையடுத்து முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து 100-க்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடும்பாறை போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாரும் ஊராட்சி அலுவலர்களும் தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
 இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: கடந்த 6 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்படுவதுடன் குடிநீருக்காக பெண்கள் பல கிலோ மீட்டர் தூரம் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
 அதேபோல் எங்கள் பகுதியில் தோட்டத்து கிணறுகளில் உப்பு தண்ணீர் மட்டும் கிடைப்பதால், அதனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். மேலும் அந்த தண்ணீரை பயன்படுத்தினால் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. எங்கள் மலை கிராமத்திற்காக மூல வைகை ஆற்றில் புதிய உறை கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com