சம்பள பேச்சுவார்த்தை  கூட்டம் தொழிலாளர்கள் வெளிநடப்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  திராட்சைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை கூட்டத்திலிருந்து தொழிலாளர்கள்


தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  திராட்சைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை கூட்டத்திலிருந்து தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தேனி மாவட்டத்தில் ஓடைப்பட்டி, கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிற்கு திராட்சை விவசாயம் செய்யப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டிற்கு 3 முறை மகசூல் எடுக்கப்படும். பன்னீர் திராட்சை அதிகளவில் கேரளத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர, புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் திராட்சைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 
திராட்சைத் தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.  இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மிகக் குறைவாக இருப்பதாகக்  கூறி தொழிலாளர்கள் மாவட்டநிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.  
பேச்சுவார்த்தை: இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி தலைமையில் பேச்சுவார்தை நடைபெற்றது. இதில், 10 மணி நேரம் வேலை செய்தால் ரூ.500 சம்பளம் கொடுக்கப்படும். வெளியூர்களிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு, உள்ளூர் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என முதலாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால்,  இதற்கு தொழிலாளர்கள் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேச்சு வார்த்தை கூட்டத்திலிருந்து தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com