ஆண்டிபட்டி காய்கறி வாரச் சந்தை ரூ.25 லட்சத்துக்கு ஏலம்: கடந்தாண்டைக் காட்டிலும் ரூ.18 லட்சம் அதிகம்
By DIN | Published On : 24th July 2019 06:43 AM | Last Updated : 24th July 2019 06:43 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி நகரில் செயல்பட்டு வரும் காய்கறி வாரச்சந்தையில் வரிவசூல் செய்வதற்கான ஏலம், செவ்வாய்க்கிழமை கடும் போட்டிக்கிடையே ரூ. 25 லட்சத்துக்கு விடப்பட்டது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.18 லட்சம் அதிகமாகும்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் வாரந்தோறும் திங்கள்கிழமை காய்கறி சந்தை நடைபெறுகிறது. இதில், ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வாரச்சந்தையில் வரிவசூல் செய்வதற்கான ஏலம் கடந்த ஜூன்19 ஆம் தேதி நடைபெறுவதாக, பேரூராட்சி நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும், ஏலத்தில் பங்கேற்பவர்கள் முன்வைப்புத் தொகையாக ரூ.10 லட்சத்துக்கு காசோலை பெற்று பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, வாரச்சந்தை வரி வசூல் ஏலம் எடுக்க பலர் வந்திருந்தனர். கடந்த பல ஆண்டுகளாக ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுகவினரின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால், ஏலத்தில் அதிமுகவினரை தவிர மற்ற கட்சியினர் பங்கேற்கவில்லை. ஆனால், இந்த முறை ஏலத்தில் அதிமுக, திமுக, அமமுக சார்பில் 12 பேர் பங்கேற்க காத்திருந்தனர்.
வாரச்சந்தை வரி வசூல் ஏலத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டதால், மறுதேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. அதையடுத்து, மறுஏலத்தின்போதும் கடும் போட்டி நிலவியதாலும், அங்கு கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதாலும் மீண்டும் இரண்டாவது முறையாக ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட வாரச்சந்தை ஏலம், மூன்றாவது முறை பகிரங்க ஏலமாக பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில், 3 கட்சியினரும் தங்கள் ஆதரவாளர்களுடன் குவிந்ததால், பதற்றமான சூழ்நிலை நிலவியது. எனவே, பேரூராட்சி வளாகத்தில் பாதுகாப்பு பணிக்காக 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஏலம் எடுப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, அரசு ஆரம்பத் தொகையாக ரூ. 9 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில், கணேசபுரத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் பிரபு என்பவர் அதிகபட்சமாக ரூ.25 லட்சத்துக்கு ஏலம் கேட்டதையடுத்து, அவருக்கே வாரச்சந்தை வரிவசூல் உரிமம் ஏலம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வாரச்சந்தை கடந்தாண்டில் ரூ. 7.20 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. தற்போது, ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனதால், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.18 லட்சம் அதிகம் என பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.