பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தும் தொடரும் மின் உற்பத்தி
By DIN | Published On : 24th July 2019 06:45 AM | Last Updated : 24th July 2019 06:45 AM | அ+அ அ- |

முல்லைப் பெரியாறு அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாதபோதிலும், 3 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை லோயர்-கேம்ப்பில் மின் உற்பத்தி தொடர்ந்தது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை குறைந்த அளவு பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தண்ணீர் வரத்து இல்லை. இதனால், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 782 கன அடியாக இருந்தது. அதேநேரம், திங்கள்கிழமை அணைக்கு விநாடிக்கு 1,272 கன அடி தண்ணீர் வந்தது. ஒரே நாளில் விநாடிக்கு 490 கன அடி தண்ணீர் குறைந்தது, கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலை தொடருமானால், முதல்போக சாகுபடிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என, நன்செய் விவசாயி கே. ராமர் தெரிவித்தார்.
நீர் மட்ட விவரம்: செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 113.85 அடி, நீர் இருப்பு 1,534 மில்லியன் கன அடி, அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 782 கன அடி, அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இருப்பினும், மூன்றாவது நாளாக 3 ஆம் மின்னாக்கியில் தலா 27 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
மழை நிலவரம்: பெரியாறு அணை பகுதியில் 11.6 மில்லி மீட்டரும், தேக்கடியில் 5.2 மி.மீ., கூடலூரில் 2 மி.மீ., உத்தமபாளையத்தில் 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகியிருந்தது.