Enable Javscript for better performance
ஆண்டிபட்டி அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அருகே ஊராட்சி நிர்வாகம் குடிநீரை சீராக வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சிக்குள்பட்ட பிராதுக்காரன்பட்டி கிராமம் உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு அரப்படித்தேவன்பட்டி வைகை ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 
    இந்நிலையில் இங்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தண்ணீர் கொண்டு வரும் வழியில் உணவகங்கள்,திருமண மண்டபங்களுக்கு சட்டவிரோதமாக சிலர் தண்ணீரை திருடி வருவதாகவும் புகார் எழுந்தது.  
    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அக்கிராமத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேனி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
    இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள் கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோவில் முன்பு ஊராட்சி மன்ற அதிகாரிகள் நேரில் வந்து உறுதியளிக்கும் வேண்டும் என தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    இதனையடுத்து அங்கு வந்த உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ரெங்கராஜன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சட்ட விரோதமாக தண்ணீர் திருடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உடனடியாக இக்கிராமத்திற்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai