முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
உத்தமபாளையம் வட்டாரத்தில் காட்சிப் பொருளான சுகாதார வளாகங்கள்
By DIN | Published On : 30th July 2019 08:50 AM | Last Updated : 30th July 2019 08:50 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள பேரூராட்சிகளில் பணிகள் முடிந்து காட்சிப் பொருளாக உள்ள சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டிபேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ரூ.18 லட்சத்தில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கால தாமதத்திற்கு பின்பு தற்போது பணிகள் முடிந்துள்ளன.
அதே போல உத்தமபாளையம் பேரூராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில், கோம்பை பேரூராட்சி சார்பில் கருக்கோடையில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருள்களாகவே உள்ளன.
இதனால், க.புதுப்பட்டி, கே.சி.பட்டி, கோவிந்தன்பட்டி, கோம்பை, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. மேலும், திறந்த வெளி கழிப்பறைகளால் அப்பகுதிகளில் சுகாதார கேடு ஏற்படும் நிலையும் உள்ளது என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியது: புதிய சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில், அவை, சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடங்களாக மாறி வருகின்றன. மேலும், இரவு நேரங்களில் சட்ட விரோத மது கூடங்களாக அவை மாறியுள்ளன என்றனர்.
எனவே, உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிகள் முடிந்து காட்சி பொருள்களாக நிற்கும் சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.