கம்பத்தில் மண் கடத்திய 2 டிராக்டர்கள் வட்டாட்சியர் கண்முன் தப்பின
By DIN | Published On : 09th June 2019 02:49 AM | Last Updated : 09th June 2019 02:49 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கம்பத்தில் மண் கடத்தி வந்த 4 டிராக்டர்களை வட்டாட்சியர் சோதனை செய்துகொண்டிருந்தபோதே அதில் 2 டிராக்டர்கள் தப்பிச் சென்றன.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மண், மணல் கடத்துவதாக வந்த புகாரின் பேரில் உத்தமபாளையம் வட்டாட்சியர் சத்தியபாமா சனிக்கிழமை கம்பம் வந்தார். அவர் வீரப்பநாயக்கன் குளத்து பகுதியில் சென்றபோது எதிரே மண் ஏற்றி வந்த நான்கு டிராக்டர்களை மறித்து நிறுத்தினார். பின்பு அவர் டிராக்டர் ஓட்டுநர்களிடம் மண் அள்ள அனுமதி உள்ளதா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். ஓட்டுநர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்று தெரிந்தது. இது பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும் போதே, பின்புறம் நின்றிருந்த இரண்டு டிராக்டர்களை அதனை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் விரைவாக ஓட்டிச் சென்று விட்டனர்.
பிடிபட்ட இரண்டு டிராக்டர்களும் உத்தமபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இதையடுத்து மண் அள்ளப்படும் இடமான வீரப்பநாயக்கன்குளம் பகுதிக்கு வட்டாட்சியர் சென்றார். அங்கு, 50-க்கும் மேலான டிராக்டர்களில் ஜேசிபி வாகனம் மூலம் மண் ஏற்றப்படுவது தெரியவந்தது. அவற்றுக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டுகளில் குழறுபடி இருப்பது தெரியவந்ததால் அவற்றை கைப்பற்றியை வட்டாட்சியர் அங்கு மண் எடுக்க கூடாது என்று எச்சரித்துவிட்டு சென்று விட்டார்.
இது பற்றி விவசாயி விஜயரஞ்சித் கூறும்போது, குளம் கண்மாய்களில் மண் எடுக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்துள்ளார்.
ஒரு அனுமதியை வைத்து பல பேர் மண் எடுத்து உள்ளூர் மட்டுமல்லாமல் அருகே உள்ள ஊர்களுக்கும் எடுத்துச் சென்று, விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு செல்லாமல், வணிக ரீதியாக பயன்படுத்தி வருகின்றனர். இதை வருவாய்த்துறையினர் தடுக்க வேண்டும் என்றார்.