தேனி மாவட்டத்தில் 3 இடங்களில் மணல் குவாரி அமைக்க அரசுக்கு பரிந்துரை
By DIN | Published On : 14th June 2019 07:14 AM | Last Updated : 14th June 2019 07:14 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் 3 இடங்களில் மணல் குவாரிகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தேனி மாவட்டத்தில் அரசு சார்பில் மணல் குவாரிகள் செயல்படாத நிலையில் கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு இருந்து வருகிறது. மணல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் ஆறு மற்றும் ஓடைப் படுகைகளில் மணல் திருட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், மாவட்டத்தில் அரசு சார்பில் 3 இடங்களில் மணல் குவாரிகள் அமைப்பதற்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை, பொதுப் பணித்துறை ஆகியவற்றின் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலர்கள் கூறியது: ஆண்டிபட்டி வட்டாரம் தெப்பம்பட்டி, போடி வட்டாரம் கொட்டகுடி ஆற்றங்கரை, தேவாரம் 18 ஆம் கால்வாய் பகுதி ஆகிய இடங்களில் மணல் குவாரி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றனர்.