மருமகளை வீட்டில் இருந்து விரட்டிய மாமனார் உள்பட 4 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 14th June 2019 07:15 AM | Last Updated : 14th June 2019 07:15 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி அருகே மருமகளை வீட்டில் இருந்து விரட்டி கொடுமைபடுத்தியதாக மாமனார் உள்பட 4 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி பெனிட்டா (24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் கேரளாவுக்கு கூலி வேலைக்குச் சென்ற நிலையில் பெனிட்டா மாமனார் வீட்டில் இருந்து வந்தார்.
பெனிட்டாவிற்கும் மாமனார் மற்றும் மாமியாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் பெனிட்டா புகார் அளித்தார்.
இதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி, பெனிட்டாவின் மாமனார் பால்ராஜ், மாமியார் பவுன்தாய், கணவரின் தம்பி வரதராஜ், அவரது மனைவி சித்ரா ஆகிய 4 பேர் மீது மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.