கம்பத்தில் நெகிழிப் பைகள் பறிமுதல்: கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
By DIN | Published On : 23rd June 2019 12:48 AM | Last Updated : 23rd June 2019 12:48 AM | அ+அ அ- |

கம்பம் நகரில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளை நகராட்சி சுகாதாரத்துறையினர் சனிக்கிழமை கைப்பற்றி கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக நகராட்சி சுகாதாரத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில், ஆணையாளர் (பொறுப்பு) எம்.செல்வராணி, சுகாதார ஆய்வாளர்கள் ஜெயசீலன், சுருளியப்பன் ஆகியோர் ஊழியர்களுடன் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோம்பை சாலையில் முபாரக் என்பவர் கடையை சோதனை செய்த போது, அங்கு தடை செய்யப்பட்ட 7 பண்டல்கள் நெகிழிப் பைகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அதனைக் கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளர் முபாரக்கிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.