ஆண்டிபட்டி, நிலக்கோட்டையில் பா.ஜ.க. மூத்த தலைவர் நினைவு தினம்
By DIN | Published On : 24th June 2019 07:13 AM | Last Updated : 24th June 2019 07:13 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாஜக மூத்த தலைவரான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அக்கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாரதீய ஜனதா கட்சி கடந்த 1951 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டபோது, அக்கட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 56 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, டி.சுப்புலாபுரம் கிராமத்தில் அக்கட்சியினர் கொடியேற்றி, அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் ஊராட்சித் தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் வழக்குரைஞர் ஆர். குமார் கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.
இதில், முன்னாள் மாவட்டத் தலைவர் ஓம் பாலகிருஷ்ணன் மற்றும் சின்னமாயன், அறிவழகன், சுப்பிரமணி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் பாளையங்கோட்டை ஊராட்சியிலுள்ள ஸ்ரீசக்தி நகரில், பாஜக மூத்த தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அக்கட்சியின் மகளிர் அணி திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் பி.ஜெ. ஜெயந்தி பிரீத்தா தலைமை வகித்தார். இதில், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு, அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலிலி செலுத்தினர்.