கம்பம் பள்ளத்தாக்கில் ஆழ்துளை கிணறுகள் மூலம் நாற்றங்கால் அமைப்பு
By DIN | Published On : 25th June 2019 07:05 AM | Last Updated : 25th June 2019 07:05 AM | அ+அ அ- |

தென்மேற்கு பருவமழை கொகொடுக்காத நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆழ்துளைக் கிணறு மூலமாக நாற்றங்கால் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனால், முறைப்பாசன நீரை நம்பி இருக்கும் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து உள்ளனர்.
தென்மேற்கு பருவ மழையால் முல்லைப்பெரியாறு அணையில் தேக்கப்படும் நீரால் தேனி மாவட்டத்தில் இரு போக நெற்பயிர் விவசாயம் நடைபெறும். கடந்தாண்டு கேரளத்தில் தென் மேற்கு பருவமழை வழக்கத்தை விட 200 சதவீதம் பெய்ததால் இடுக்கி,கோட்டயம், திருவனந்தபுரம் என 10 மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழையானது ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்தாண்டு காலதாமத்துடன் மழை துவங்கிய போதும் குறைந்து அளவே மழைப்பொழிவு இருக்கிறது. இதனால் தேனி மாவட்டத்தில் மானாவாரி உள்பட அனைத்து விவசாயமும் கேள்விக் குறியாகிவிட்டது.
கம்பம் பள்ளத்தாக்கில் உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, குச்சனூர், சீலையம்பட்டி போன்ற பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாத நிலையில் முல்லைப்பெரியாற்றில் இருந்து பாசன நீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக சில விவசாயிகள் நாற்றங்கால் அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக முதல் கட்டமாக நிலத்தை உழவு செய்து சரிசெய்யும் பணிகளை தொடங்கி விட்டனர்.
முல்லைப்பெரியாற்றில் திறக்கப்படும் பாசன நீரை கால்வாய் மூலமாக குளங்களில் தேக்கி வைத்து முறைப்பாசனத்தில் இரு போக நெற்பயிர் விவசாயம் நடைபெற்றது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் அவ்வப்போது மழை பொழிவு கைகொடுக்காத நிலையில், வசதி படைத்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்கின்றனர்.
அதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறை நேரத்திலும் பயிரை காப்பாற்றி விடுகின்றனர். ஆனால், முறைப்பாசன நீரை மட்டும் நம்பியுள்ள ஏழை மற்றும் நடுத்த விவசாயிகளின் நெல் பயிர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக காட்சியளிக்கின்றன.