சுடச்சுட

  

  ஆண்டிபட்டி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை குறைப்பு: கிராமப்புற மாணவர்கள் தவிப்பு

  By DIN  |   Published on : 26th June 2019 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையில் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், கிராமப்புற மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
  தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் கடந்த 2004 ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 
  இக்கல்லூரியில், ஒவ்வொரு கல்வி ஆண்டும் பி.ஏ. பொருளாதாரம் பிரிவில் 120 மாணவர்களும், பி.எஸ்சி. கணிதம் பிரிவில் 60, பி.எஸ்சி. இயற்பியல் பிரிவில் 80, பி.காம். பிரிவில் 80 என மொத்தம் 340 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதனால், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது.
  இந்நிலையில், நடப்பு ஆண்டு முதல் உறுப்புக் கல்லூரியை அரசு கலைக் கல்லூரியாக மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், காலை, மாலை என இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வந்த கல்லூரியில் தற்போது காலையில் ஒரு பிரிவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இங்குள்ள பாடப் பிரிவுகளையும் குறைக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
  இதன் காரணமாக, இதுவரை முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கு 170  மாணவ, மாணவியர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால், இக்கல்லூரியில் படிக்க விரும்பிய பெரும்பாலான மாணவ-மாணவியர் அனுமதி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  
  எனவே, கல்லூரியில் பழைய நடைமுறைப்படி மீண்டும் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என, பொதுமக்களும், சமூகநல  ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai