கம்பம் பகுதியில் தனியார் இ-சேவை மையங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்
By DIN | Published On : 04th March 2019 07:42 AM | Last Updated : 04th March 2019 07:42 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், கம்பம் நகர் பகுதியில் தனியார் இ - சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
ஸ்மார்ட் கார்டுகளில் குடும்ப விவரங்கள் பற்றிய தகவல்கள் மாறியிருந்தால், சரி செய்ய, அரசு இ-சேவை மையங்கள் மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் இ-சேவை மையங்கள் மூலம் குறைந்த கட்டணத்தில் திருத்திக்கொள்ளலாம் என அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி, குடும்ப அட்டைதாரர்கள் புகைப்படம், ஆதார் அட்டை, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து, அரசு மற்றும் தனியார் இ-சேவை மையங்களுக்கு சென்று, தகவல்களை திருத்திக் கொள்ளலாம்.
இந்நிலையில், கம்பம் பகுதியில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பெரும்பாலும் சர்வர் வேலை செய்வதில்லை எனக் கூறி, பொதுமக்களை தனியார் இ-சேவை மையங்களுக்கு அனுப்புகின்றனர்.
இ-சேவை மையங்களில் குறைந்தபட்சமாக ரூ.20 முதல் ரூ. 60 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களிடம் ரூ.100 முதல் ரூ. 300 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மக்களின் அவசிய தேவையைப் புரிந்து கொண்டு, ஐந்து மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு அட்டையில் புகைப்படம், முகவரி மாற்றம், பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்கம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக கட்டணம் வசூல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே, தேனி மாவட்ட நிர்வாகம் இ-சேவை மையங்களில் ஆய்வு செய்து, கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.