சுடச்சுட

  

  அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளிடம் கமிஷனுக்கு கொள்முதல்: விவசாயிகள் சங்க மாநில செயலர் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 17th March 2019 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் கொண்டு வரும் நெல், கமிஷன் அடிப்படையில் உடனடியாக கொள்முதல் செய்யப்படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பி.சண்முகம் குற்றம்சாட்டினார்.
  தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விவசாயிகள் எடுத்து வரும் நெல்லை கொள்முதல் செய்யாமல், ஒரு நாளைக்கு 150 மூட்டை மட்டும் கொள்முதல் செய்ய வேண்டும் என வரன்முறை நிர்ணயித்துள்ளனர். இதனால், பாதிக்கும் மேற்பட்ட நெல்லை விவசாயிகள் திருப்பி எடுத்து செல்லும் நிலை உள்ளது.
  போதுமான நிதியை தமிழக அரசு ஒதுக்காததால் மையங்களில் இருந்து திருப்பி அனுப்பி விடுகின்றனர். சாக்கு இல்லை, நிதி இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒவ்வெரு மூட்டைக்கும் ரூ.30 முதல் ரூ.40 வரை கட்டாயப்படுத்தி விவசாயிகளிடம் இருந்து வசூல் செய்கின்றனர். தற்போது ஒரு குவிண்டாலுக்கு சன்ன ரகத்துக்கு ரூ. 1,840 , மோட்டா ரகத்துக்கு ரூ. 1,800 வழங்கப்படுகிறது. சுவாமிநாதன் குழு அறிக்கையின் படி உற்பத்தி தொகைக்கு மேல் 50 சதவீதம் உயர்த்தி வழங்கவேண்டும் என்றால் குவிண்டாலுக்கு ரூ. 3000 வழங்க வேண்டும்.
  கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை திறந்தவெளியில் வைத்திருப்பதால் மழைக் காலங்களில் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். அரசுக்கும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படும். சேமித்து வைப்பதற்கு குடோன் வசதி ஏற்பாடு செய்யவேண்டும். கொள்முதல் மையங்களுக்கு வரும் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும். வெளி மாவட்ட வியாபாரிகள் எடுத்து வரும் நெல்லை, அரசு விலைக்கு கமிஷன் அடிப்படையில் அனைத்து மையங்களிலும் உடனடியாக வாங்கப்படுகிறது. இதனை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
  அப்போது,  விவசாய தொழிலாளர் நலச்சங்க  மாவட்ட செயலாளர் கண்ணன், தாலுகா செயலாளர் முருகன், சிஐடியூ மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் 
  உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai