ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: திமுக-அதிமுக சார்பில் அண்ணன், தம்பி போட்டி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் சார்பில்,  உடன்பிறந்த  சகோதரர்கள் மோதுகின்றனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் சார்பில்,  உடன்பிறந்த  சகோதரர்கள் மோதுகின்றனர்.
      முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதி, ஒவ்வொரு தேர்தலிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
    அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இத் தொகுதியில், கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தங்க. தமிழ்ச்செல்வன் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தற்போது இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
     இந்த இடைத் தேர்தலில் திமுக சார்பில், அக் கட்சியின் ஆண்டிபட்டி ஒன்றியப் பொறுப்பாளர் ஏ. மகாராஜன் (64) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அதிமுக சார்பில் அக் கட்சியின் ஆண்டிபட்டி ஒன்றியச் செயலர் ஏ. லோகிராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதானக் கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேட்பாளர்கள் உடன்பிறந்த சகோதரர்களாவர்.
      திமுக வேட்பாளர்:  ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டியைச் சேர்ந்த திமுக வேட்பாளர் ஏ. மகாராஜன், 1974-இல் முத்தனம்பட்டி திமுக கிளைச் செயலராக இருந்தார். கடந்த 2001-இல் திமுக ஆட்சியின்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2006-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். தற்போது, ஆண்டிபட்டி திமுக ஒன்றியப் பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். 
   அதிமுக வேட்பாளர்:  திமுக வேட்பாளர் ஏ. மகாராஜனின் தம்பியான அதிமுக வேட்பாளர் ஏ. லோகிராஜன்(60), கடந்த 1986-ஆம் ஆண்டில் முத்தனம்பட்டியில் அதிமுக கிளைச் செயலராகப் பொறுப்பேற்றார். அதையடுத்து, அதிமுக ஆட்சியில் கடந்த 2002  முதல் 2007-ஆம் ஆண்டு வரை ஆண்டிபட்டி அதிமுக ஒன்றியச் செயலராகவும், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பதவி வகித்தார். கடந்த 2018-இல் மீண்டும் ஆண்டிபட்டி அதிமுக ஒன்றியச் செயலராக நியமிக்கப்பட்டார். 
    ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் பிரதானக் கட்சிகளான திமுக, அதிமுக சார்பில் உடன்பிறந்த சகோதரர்கள் களமிறக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com