சின்னமனூரில் இரண்டாம் போக நெல் அறுவடைப் பணிகள் தொடக்கம்: விளைச்சலும், விலையும் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம், சின்னமனூர் மற்றும்  சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டாம் போக நெல் அறுவடைப் பணிகள்

தேனி மாவட்டம், சின்னமனூர் மற்றும்  சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டாம் போக நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விளைச்சலும், விலையும் எதிர்பார்த்தபடி கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு பாசன நீர் மூலமாக, மாவட்டத்தில் லோயர் கேம்ப் முதல் பழனிச்செட்டிபட்டி வரையில் 14,707 ஏக்கர் இருபோக நெற்பயிர் விவசாயம் நடைபெறும். ஜூன், ஜூலை மாதங்களில் எதிர்பார்த்தபடி பருவமழை கைகொடுத்த நிலையில், முதல் போக நெற்பயிர் சாகுபடி நிறைவு பெற்றது.  
அதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம்  இரண்டாம் போகத்துக்கு நாற்று நடும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், வடகிழக்குப் பருவமழை கைகொடுக்காததால், பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால்,  இரண்டாம் போக விவசாயம்  முழுமை பெறுமா என விவசாயிகள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. 
அறுவடைப் பணிகள் தொடக்கம்: சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக நடைபெற்ற நெற்பயிர் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறையால் முறைப் பாசனம் முறையை விவசாயிகள் மேற்கொண்டனர். இதன்மூலம், 2 ஆம் போக நெற்பயிர் விவசாயத்தில் முதல்கட்ட அறுவடைப் பணிகள்  தொடங்கியுள்ளன.
நல்ல விளைச்சல்: முதல் போகத்தில் எதிர்பார்த்தபடி விவசாயிகளுக்கு போதிய விளைச்சல் மற்றும் விலையும் கிடைக்கவில்லை. ஆனால், இரண்டாம் போகத்தில் நல்ல விளைச்சலும், விலையும் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியது: முதல் போகத்தில் அறுவடை நேரத்தில் புகையான் நோய்கள் தாக்கி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், ஏக்கருக்கு 35 முதல் 38 மூட்டைகள் வரையே கிடைத்தன. ஆனால், இரண்டாம் போகத்தில்  ஏக்கருக்கு 40 முதல் 42 மூட்டைகள் வரை கிடைத்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறுவடை தொடக்கம் என்பதால், 62 கிலோ எடை கொண்ட மூட்டை ரூ.1000 முதல் ரூ.1,100 வரையில் விற்பனையாகிறது. இந்த விலையானது, உத்தமபாளையம் போன்ற பிற பகுதிகளிலும் அறுவடைப் பணிகள் நடைபெற்றால், சற்று குறைய வாய்ப்புள்ளது. தற்போது, முதல் போகத்தை விட ரூ.200 முதல் ரூ.300 வரை  மூட்டைக்கு அதிகமாக விலை கிடைத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com