ஆண்டிபட்டி புதிய பாசனத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தேர்தலை புறக்கணிப்பதாக விவசாயிகள் அறிவிப்பு: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றவும் முடிவு
By DIN | Published On : 22nd March 2019 07:04 AM | Last Updated : 22nd March 2019 07:04 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள கண்மாய், குளங்களுக்கு முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் புதிய பாசனத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காததால், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றை புறக்கணித்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்போவதாக, விவசாயிகள் வியாழக்கிழமை அறிவித்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா விவசாயிகள் தமிழ் விவசாய சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் 50-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறுகுளங்கள் உள்ளன. இவற்றுக்கு, மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் வரும் நிலை உள்ளது.
இந்த கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் வகையில், எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் திப்புரவு அணைத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், அத்திட்டம் பல்வேறு காரணங்களால் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இத்திட்டம் நிறைவேற வாய்ப்பில்லை என்பதை அறிந்த ஆண்டிபட்டி தமிழ் விவசாய சங்கத்தினர், திப்புரவு திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டத்தை உருவாக்கினர்.
அதன்படி, கம்பம் பகுதியில் முல்லைப் பெரியாற்றிலிருந்து ராட்சத குழாய் மூலம் ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வர தனியார் பொறியாளர்களின் உதவியுடன் திட்டம் தீட்டினர். இந்த திட்டத்துக்கு, 47 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய்கள் அமைக்கவேண்டும்.
இந்த புதிய திட்டத்தை செயல்படுத்தினால், ஆண்டிபட்டியில் உள்ள அனைத்துக் கண்மாய்களும் பாசன வசதி பெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தின் வரைவு மதிப்பீட்டை, தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மேலும், இதை நிறைவேற்றும்படி பலமுறை மனு அளித்தனர்.
தொடர்ந்து, இத்திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும் என எதிர்பார்த்தும் காத்திருந்தனர். ஆனால், எந்த அறிவிப்பும் வராததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனிடையே, தமிழ் விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், ஆண்டிபட்டி ஓடைத் தெருவில் உள்ள முனியாண்டி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், முல்லைப் பெரியாற்றிலிருந்து ஆண்டிபட்டி பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரும் புதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் வகையில், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்றும், விவசாயிகள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடாதபட்சத்தில், அடுத்தடுத்த கட்டப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும், விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...