வெளி மாவட்ட மாணவர்களைவாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏற்பாடு
By DIN | Published On : 22nd March 2019 07:06 AM | Last Updated : 22nd March 2019 07:06 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கூறினார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலர் அலுவலகத்தில் புதன்கிழமை அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கூறியது:
வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத 18 வயது பூர்த்தியடைந்த மாணவ, மாணவிகளிடம் மார்ச் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் பெற்று வாக்காளர் பட்டியலில் சேர்க்க சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளிடமும் வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெற்றுத் தந்தால், அவர்களது பெயரை சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், அவர்கள் மூலம் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...