Enable Javscript for better performance
கேரள அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் 3 பேர் கைது: விவசாயிகள் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    கேரள அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் 3 பேர் கைது: விவசாயிகள் கண்டனம்

    By DIN  |   Published on : 28th March 2019 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கேரள அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். இதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
    முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கேரள அரசை கண்டித்து கடந்த 2011 இல் கம்பம், கூடலூர் பகுதியில் 45 நாள்கள் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதுதொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பரில் கூடலூரைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என 24 பேர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.  இதையடுத்து கடந்த 2016 மார்ச் மாதம் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கூடலூரைச் சேர்ந்த சுதாகர், இளையராஜா, சரவணன், அருள்மணி, செங்குட்டுவன், தியாகராஜன், செல்வராஜ், மாயராஜ், அண்ணாதுரை, மலைச்சாமி, ரவி, தமிழ்செல்வன், கொடியரசன், அசோகன், தெய்வம், சிரஞ்சீவி, பிரபு, அன்பழகன், செல்வம், முருகன், ராஜீவ்காந்தி, ராஜா, கென்னடி மற்றும் சுரேஷ் ஆகிய 24 பேர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் சுரேஷ் என்பவர் இறந்து விட்டார். அசோகன், சிரஞ்சீவி, ராஜா தவிர மற்றவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். 
    இந்த நிலையில் அசோகன், சிரஞ்சீவி, ராஜா ஆகிய மூவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் கூடலூர் போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்து போடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  தமிழக உரிமைக்காக முல்லைப்பெரியாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என விவசாய சங்கங்களும், பெரியாறு அணை மீட்புக்குழுவினரும், இப்பகுதி பொதுமக்களும், அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் மூன்று பேரை கைது செய்தது இப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai