வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: புறவழிச் சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி

தேனி மாவட்டம், வீரபாண்டியில் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெறும் நாள்களில் புறவழிச் சாலை

தேனி மாவட்டம், வீரபாண்டியில் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெறும் நாள்களில் புறவழிச் சாலை வழியாக வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
      தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
     வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 7-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 10-ஆம் தேதி நடைபெறுகிறது. 
     திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்படும் தற்காலிக கடைகளை எளிதில் தீப் பற்றாத வகையில் பாதுகாப்பாக அமைக்க வேண்டும். கடைகள் மற்றும் தனியார் மண்டபங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே அடுப்புகளை பயன்படுத்த வேண்டும். மின் இணைப்புகள் முறையாக வழங்கப்பட்டுள்ளதை மின்வாரியப் பொறியாளர்கள் உறுதி செய்யவேண்டும். உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமான தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் உறுதி செய்யவேண்டும். 
     வீரபாண்டியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, காவல் துறை சார்பில் 25 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் திருவிழா சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
    பொதுமக்களின் வசதிக்காக, வீரபாண்டியில் தேனி சாலை, கம்பம் சாலை ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 
தேரோட்டம் நடைபெறும் மே 10-ஆம் தேதி நீங்கலாக, மற்ற அனைத்து திருவிழா நாள்களிலும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் வீரபாண்டி புற வழிச்சாலை வழியாக சென்றுவர அனுமதிக்கப்படும் என்றார். 
  கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச. கந்தசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பா. திலகவதி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பச்சையப்பன், வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், பேரூராட்சி செயலர் அலுவலர் குணாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com